சென்னை: தொண்ணூறுகளில் புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வந்த நடிகை கௌதமி, தமிழகம் முழுவதும் பல்வேறு சொத்துக்களை வாங்கிய நிலையில், 2004-ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோது, அந்த சொத்துக்களை விற்பதற்காகச் சினிமா தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான C.அழகப்பன் என்பவரை பவர் ஆஃப் அட்டர்னியாக நியமித்திருந்தார்.
அதன்படி 2004-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்தை விற்று, செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை வாங்கிய அழகப்பன், அந்த நிலத்தை நடிகை கௌதமி பெயரிலும், தனது மனைவி நாச்சல் பெயரிலும் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக நடிகை கௌதமி அளித்த புகாரில் அழகப்பன், நாச்சல் மற்றும் இவர்களது மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் K.M.பாஸ்கர், ஓட்டுநர் G. சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த சூழலில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அழகப்பனின் மனைவி நாச்சல் மற்றும் மருமகள் ஆர்த்தி தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், நாச்சலின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும், மருமகள் ஆர்த்திக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, புகார்தாரரான நடிகை கௌதமி தரப்பில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அழகப்பனின் மனைவி நாச்சல் மற்றும் மருமகள் ஆர்த்தி ஆகியோர் தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், விசாரணை தொடர்பான அறிக்கையை ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி தாக்கல் செய்யவும், சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதற்கு அனுமதி வழங்க உத்தரவிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகையை பிச்சை என்று கூறிய விவகாரம்.. விமர்சனங்களுக்கு குஷ்பு எழுப்பும் கேள்வி!