சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக்.06) காலை 11 மணி முதல் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய விமானப் படை வீரர்களின் வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட, சென்னை மட்டும் அல்லாது வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் மிகுந்த ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது குடும்பத்துடன் வந்திருந்து இந்நிகழ்ச்சியை கண்டு களித்தார். துணை முதல்வரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு உள்ளிட்டோரும் நமது விமானப் படை வீரர்களின் மெய்சிலிர்க்கும் சாகசங்களை கண்டு ரசித்தனர்.
இதுமட்டும் அல்லாது, இந்த நிகழ்ச்சியில் சுகோய் 30 MKI, MI 17, VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர், தேஜஸ் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள், மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்டவை பல்வேறு சாகசங்களை நிகழ்த்தின.
இதையும் படிங்க: Chennai Air Show 2024: ஆகாயத்தில் நிகழ்ந்த அதிசயம்.. மெரினாவில் அலை அலையாய் திரண்டு கண்டுகளித்த மக்கள்!
அதிலும் குறிப்பாக,
- இடி முழக்கத்துடன் உறுமிக்கொண்டு வானில் பறந்தது ஹார்வர்ட் விமானம்
- தீப்பொறிகளை உமிழ்ந்தபடி பறந்தது ரஃபேல் போர் விமானம்
- கழுகுபோல் வானில் சீறிப்பாய்ந்தது கார்கில் போரில் பங்கேற்ற ஜாகுவார் விமானம்
- மின்னல் போல மேகங்களை கிழித்துக் கொண்டும், வானில் குட்டிக்கரணம் அடித்தபடியும் பறந்தது தேஜஸ் விமானம்
- அந்தரத்தில் பறந்தப்படி, தேஜஸ் விமானத்தில் கெத்து காட்டிய பாண்டியர் குழு விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு சாகசம்
- புயல் வேகத்தில் விண்ணை அதிரவைத்தது அனைத்து வானிலையிலும் போர் செய்யும் திறனுடைய சுகோய் 30 MKI போர் விமானம்
- இதய வடிவில் புகைகளை வெளியிட்டு மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நாட்டின் மீதான அன்பை வெளிக்காட்டிய சாரங் ஹெலிகஃப்டர்கள் என பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது சென்னை மெரினாவில் இன்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்