சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்த விவசாயிகள் மற்றும் பெண்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அகில இந்திய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் (AIKKMS) தமிழ்நாடு மாநிலக் கமிட்டி நேற்று(பிப்.26) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான நில எடுப்பு அலுவலகம் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
இரண்டாவது விமான நிலையம் அமைக்க விளைநிலங்களையும், நீர்நிலைகளையும் அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். அம்மக்களது போராட்டம் மிகவும் நியாயமானதாகும்.
மேலும், வளர்ச்சித் திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படாது என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு நேர் விரோதமாக ஆட்சிக்கு வந்தப்பின்னர் செயல்படுகிறது. எனவே, கைது செய்யப்பட்ட பரந்தூர் பகுதி விவசாயிகளையும், பொதுமக்களையும் உடனே விடுதலை செய்வதோடு பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்தையும் உடனடியாக கைவிட வேண்டுமென ஏஐகேகேஎம்எஸ் தமிழக அரசாங்கத்தை வலியுறுத்துகிறது" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நேற்று (பிப்.26) காஞ்சிபுரம் மாவட்டம், ஏகாம்பரம் கிராமத்திலிருந்து பொன்னேரி கரைப் பகுதியில் அமைந்துள்ள நில எடுப்பு அலுவலகம் வரை டிராக்டரில் விவசாயிகள் பேரணியாகச் சென்று, அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதற்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை போராட்டம் துவங்குவதற்கு முன்பே, காவலர்கள் தங்களது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பொதுமக்களையும், விவசாய டிராக்டரில் போராட்டத்திற்குச் செல்வதற்காகக் கிளம்பிய விவசாயிகள், பெண்கள் என அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேன்சலான பாஜகவின் இணைப்பு விழா.. எல்.முருகன் கொடுத்த முக்கிய அப்டேட்!