மதுரை: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) சென்னையில் ஏற்கனவே நிதியுதவி செய்து வரும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்திற்கான காலமுறை ஆய்வு பணிக்காக சென்னை வந்துள்ளது. இந்த வங்கி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதில் விருப்பம் தெரிவித்ததுடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து மதுரையில் இன்று (ஜூலை 3) முதற்கட்ட பார்வையை மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, நாளை கோயம்புத்தூரிலும் பார்வையிட உள்ளது. இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யு கு (Mr.Wenyu Gu, Senior Investment Officer, AIIB), தலைமை பொது மேலாளர் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) ரேகா பிரகாஷ் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், நிதியுதவி செய்வதில் பிற பன்னாட்டு வங்கிகளும் இதே போன்ற ஆர்வத்தை காட்டி வருகின்றன. இருப்பினும், ஒன்றிய அரசின் நிதி அமைச்சகம் தான் நிதி நிறுவனத்தை சரியான நேரத்தில் முடிவு செய்யும். சர்வதேச நிதியுதவி கோரி, தமிழ்நாடு அரசு ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒன்றிய அரசுக்கு திட்ட பரிந்துரைகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி எங்கே? தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு