தேனி: தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு முறைகேடாக மணல், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக இருந்து வந்துள்ளது. இதில், குவாரி உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கனிமங்களை வெட்டி கேரளாவிற்கு முறைகேடான வகையில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், போலி பாஸ் அடித்து தேனியிலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், தேனி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து புகார் அளித்த கட்சியின் மாவட்டச் செயலாளர் முருகன் கூறுகையில், “தேனி மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான கனிம வளங்கள் போலி பாஸ் மூலமாக கேராளாவிற்கு கடத்தப்படுகிறது. முன்னதாக, எம்.சாண்ட் 1 யூனிட் ரூ.2 ஆயிரத்திற்கு வழங்கினர். ஆனால், தற்போது ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை ரூ.4 ஆயிரம். மேலும், கனிமவளத்துறையின் சார்பில் 2,000 யூனிட்டற்கு மட்டும் பாஸ் வழங்கப்படுகிறது.
ஆனால், இங்கிருந்து கேரளாவிற்கு லாரிகள் மூலம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்டுகள் கடத்திச் செல்லப்படுகிறது. தமிழகப் பகுதியில் இருந்து கேரளாவிற்குச் செல்லும் மற்ற மாவட்ட எல்லைகளில் கடும் வாகன சோதனைக்குப் பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால், தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதி வழியாக அனைத்து வாகனங்களும் செல்கிறது.
இதனால் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சீமான் மீதான அவதூறு வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?