திருப்பூர்: கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் ஆகியோருடன் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அமைப்பினர் கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், அதிமுகவின் தலைமை நிலையச்செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், சைமா சங்கம், டையிங் சங்கம் உள்பட 20க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலிருந்தே திருப்பூரின் தொழிலுக்காக அதிமுக பாடுபட்டு வருகிறது. குறிப்பாக 2011ஆம் ஆண்டு திருப்பூர் தொழிலை காப்பாற்ற 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக கொடுத்தது.
தொழில் துறையினரின் பிரச்சினையாக இருக்கும் மின்கட்டணம், பீக் ஹவர் கட்டணம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக அதிமுக சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தியது. அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், தொழில் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். திமுக சார்பாக 38 எம்.பிகள் இருந்தும் தொழில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பங்களாதேஷ் துணிகள் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும். விமானநிலையம் விரிவாக்கம், துபாய் செல்லும் விமானங்கள் வந்து செல்லும் வகையில் வசதி மற்றும் கோவை விமான நிலையத்திலேயே சரக்கு முனைய வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
மேலும், பஞ்சு, நூல் விலைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். சோலார் பவர் சம்பந்தமான விதிமுறைகள் தளர்த்தவும் நடவடிக்கை எடுப்போம். ஜி.எஸ்.டி., அபராத பிரச்னைகளை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக நொய்யல் ஆற்றை சீர்படுத்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என வாக்குறுதிகள் அளித்து வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "கோவை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் வெற்றி வேட்பாளர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் திருப்பூர் தொழில் அமைப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ளோம்.
திருப்பூரில் பாதிப்படைந்த நிலையிலிருந்த தொழில்களைப் பாதுகாக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் வட்டியில்லா கடனாக 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல் ஆட்சியில் தான் திருப்பூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டது. திருப்பூரில் அதிமுக வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகள் திமுக ஆட்சியில் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் மற்றும் கோவை தொகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். இரண்டு தொகுதி வேட்பாளர்கள் போட்டியிடும் வேட்பாளர்கள் நாடாளுமன்றம் செல்வது உறுதி" எனக் கூறினார்.
இதையும் படிங்க: விவசாயம் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா? என எடப்பாடி பழனிசாமி சவால்!