தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் இராமநாதன் தலைமையில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், “காந்திஜி வணிக வளாகம் மாநகராட்சி இடத்தில் தனியார் துணிக்கடை ஏலம் விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, முன்னாள் ஆணையர் சரவணக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த மேயர் இராமநாதன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக” அதிமுக கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மேயர் இராமநாதன் பேசுகையில், “தற்போது தீர்மானம் எண் 51 முதல் 100 வரையிலான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. சர்ச்சைக்குரிய தீர்மானம் எண் 54 ஒத்தி வைக்கப்பப்படுகிறது” என்றார்.
இது குறித்து அதிமுக கவுன்சிலர் கோபால் கூறுகையில், “தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி இடத்தை 9 ஆண்டுகளுக்கு கொடுத்துள்ளனர். மாநகராட்சி சட்ட திட்டத்தின் படி 3 ஆண்டுகளுக்கு மேலாக இடத்தை குத்தகை கொடுப்பதற்கு எந்த வழிவகையும் கிடையாது. ஆனால், விதிமுறைகளை மீறி 9 ஆண்டுகளுக்கு கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, 4 முறை ஒப்பந்தப் புள்ளியை ஒத்திவைத்து தவணை தொகையை 4 மாதங்களுக்கு பிறகு வாங்கியுள்ளனர். எனவே, முறைகேடு இல்லை என்று கூறிய முன்னாள் ஆணையர் சரவணக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேயரின் உடந்தையில் ஊழல் நடந்துள்ளது. அடுத்த கூட்டத்தில் அதிமுக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வழங்க உள்ளோம். எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மாநகராட்சி கடை ஏலம் விட்டதில் முறைகேடு கண்டறியப்பட்டு, தற்போதைய ஆணையர் மகேஸ்வரியால் வழக்கு தொடரப்பட்டு, தனியார் துணிக்கடை ஏலத்தை ரத்து செய்யலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஐஆர்சிடிசியின் புனித தலங்களின் யாத்திரை எப்பொழுது தொடக்கம்? முழு விவரங்கள்! - IRCTC Tour Packages