சென்னை: சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் டிசி கருணா. அதிமுக பிரமுகரான இவர், சென்னை மாநகராட்சி 196வது வார்டு பெண் கவுன்சிலரின் தந்தை ஆவார். அதனால், கண்ணகி நகர் பகுதிகளுக்கு மாநகராட்சி சார்பில் எந்த திட்டம் கொண்டு வந்தாலும், அதனை தன்னிடம் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது கண்ணகி நகரில் உள்ள நேரு நகர் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (அக்.2) அப்பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகி ஒருவரின் வீட்டின் சுற்றுச்சுவரில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண் கவுன்சிலரின் தந்தை கருணா, சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதாவது, "கண்ணகி நகர் பகுதியில் பணியாற்றும் சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர்கள் என்னிடம் நேரில் வந்து பேச வேண்டும். அவரது உதவியாளர்களை அனுப்பி பேசினால் என்னுடைய ஆதரவாளர்கள் எப்படி இருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. தேவையில்லாமல் நான் போராட்டம் செய்வேன், கலாட்டா செய்வேன், பிரச்னை செய்வேன், தாங்க முடியாது உங்களால்.
இதுவே என்னுடைய ஆட்சியாக இருந்திருந்தால், எங்கிருந்தாலும் கொத்தாக தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்து ஒரே நசுக்கு நசுக்கிடுவேன். இந்த வேலையெல்லாம் என்னிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்வதைச் செய்யவில்லை என்றால் கலாட்டா செய்து வேலையை நிறுத்துவேன்" என நேரடியாகவே அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.
இதனை கூட்டத்தில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், சென்னை மேயர், அமைச்சர்கள் என அனைவரின் பார்வைக்கும் அனுப்பி வைத்து, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பின்னர் இந்த விவகாரம் குறித்து பெண் கவுன்சிலரின் தந்தை கருணாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "மழை நீர் வடிகால் பணியின் போது, அதிமுக நிர்வாகி வீடு எனத் தெரிந்தே இடித்ததால் தான் தட்டிக் கேட்டேன்" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்