தூத்துக்குடி: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் அதிமுக எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரிப்பால் தமிழக இளைஞர்கள், மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. போதை பொருளை ஒழிக்க வேண்டும். தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும் எண்ணத்தில் இன்று மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியுள்ளோம்.
மக்கள் நலன் ஒன்றே எங்களுக்கு முக்கியம் தேர்தல் முக்கியமல்ல. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு அதனை எங்களது பொதுச் செயலாளர் முடிவு செய்வார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறி விடுமோ என்ற பயத்தில் தான் அவசர அவசரமாக கூட்டணியை இறுதி செய்துள்ளனர். முழு பயத்தின் காரணமாக இத்தேர்தலை திமுக எதிர்கொள்ள உள்ளது. தமிழக மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் தேர்தலை ஒன்றையே இலக்காக கொண்டு உள்ளது.
அதிமுக தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. அதிமுகவிற்கு தேர்தல் ஒன்றும் புதிது அல்ல எங்களோடு விரும்புகின்றவர்கள் கூட்டணிக்கு வரலாம். அதிமுகவோடு புதிய தமிழகம்,புரட்சி பாரதம்,எஸ். டி.பி.ஐ அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் எங்களோடு இணைந்துள்ளன. மற்ற கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சி.ஏ.ஏ சட்டத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். 2ஜி வழக்கு இன்னும் முடிவடையவில்லை நிலுவையில் தான் உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீண்டும் சிறை செல்வார்கள். இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் எங்களுக்கு வழங்கியுள்ளது. இரட்டை இலை தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அது எங்களுக்குத் தான் சொந்தம். இந்தத் தேர்தலில் அல்ல எல்லா தேர்தலிலும் கழக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலியால் மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு.. இந்த மாதமே பணிகள் தொடங்கும் என முதலமைச்சர் அறிவிப்பு!