சேலம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில், அரசியல் கட்சியினர் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் விக்னேஷ்-ஐ ஆதரித்து ரோட் ஷோ நடத்தினார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு, தேர்தல் பரப்புரையில் பாஜக குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு வைத்தனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில், எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்ததோடு, ரோட் ஷோ குறித்தும் விமர்சித்தார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் ரோட் ஷோ நடத்த முடியுமா என்று சவால் விட்டார். அப்படி அவர் ரோட் ஷோ நடத்தினால், பொதுமக்கள் யாராவது பங்கேற்பார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் அந்த சவாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி தனது இறுதிகட்ட தேர்தல் பரப்புரையாக சேலத்தில் ரோட் ஷோ நடத்தினார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் தொடங்கி, வின்சென்ட் அம்பேத்கர் சிலை சுகவனேஸ்வரர் கோயில் கடைவீதி அக்ரஹாரம் வழியாக 3 கிலோமீட்டர் தொலைவில் சென்று கோட்டை மாரியம்மன் கோயில் முன்பு நிறைவு பெற்றது.