மதுரை: மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர்.சரவணனுக்காக, மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், அதிமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறுகையில், "இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி ஏற்பட்டுள்ளதால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே அலை தான் வீசுகிறது. ஆகையால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி.
இதுவரை நாங்கள் என்ன சாதனைகள் செய்துள்ளோம், இனி என்ன சாதனைகள் செய்யப் போகிறோம் என்பது குறித்து மக்களிடம் கூறுவதால், மக்கள் அதிமுக கூட்டணியை விரும்புகிறார்கள். அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அவரின் விமர்சனத்திற்கு அவரே தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல, கூட்டணி அமைக்கப்படுகிறது.
அதிமுக, பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு, அதிமுக மீது அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தோல்வி பயத்தால் தான் இப்படி அவதூறாக பேசி வருகிறார்கள். பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும், பாஜக தவறு செய்தால் அதை நாங்கள் கேட்போம்.
திமுக போன்று அதிமுக கிடையாது. தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பை உருவாக்கும் வகையில் வருகின்ற திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடக் கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும், தேர்தலில் நிற்க தகுதியானவர்கள்.
அதிமுகவில் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். ஆகவே, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது எனது தனிப்பட்ட முடிவல்ல. 2 கோடி அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு" எனக் கூறினார். இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீங்கள் காலில் விழுவது போன்ற புகைப்படங்களை காட்டுகிறாரே என்ற கேள்விக்கு, "அவர் காட்டட்டும். பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது தப்பா? நான் ஒன்றும் மூன்றாவது நபரிடம் வாங்கவில்லையே.
இவர்கள்தான், பிரதமரை எதிர்ப்பது போல வெளியில் வீர வசனம் பேசி வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என வெள்ளைக் குடை பிடிக்கிறார். தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் உதயநிதி ஓடோடி சென்று பிரதமரை அழைத்து வருகிறார். பிரதமர் இடத்தில் சரணாகதி அடைந்து விட்டு, வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை வேடம் போடுகிறார்கள்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: என்னை விமர்சிக்கவா உதயநிதிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு? - ஈபிஎஸ் காட்டம் - EPS Slams DMK