சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில், அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டமும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர்.ஏ.பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் முன்னிலை வகித்தார். மேலும், இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் என்.முருகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம், "ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கியுள்ளது திமுக அரசு. இவ்வளவு கடன் வாங்கியும் சொத்து வரி ஏற்றியதும், விலைவாசி ஏற்றியதும் எதற்காக? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை மக்கள் பார்க்கக் கூடாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.
கடந்த மூன்றரை ஆண்டுகள் தமிழ்நாட்டிற்குச் செய்யாததை இனி வரும் ஒரு வருட காலத்தில் என்ன செய்யப் போகிறார்கள். இதுவரை கூவ ஆற்றில் இருக்கும் குப்பைகளை அகற்றும் பணிகள் கூட நடத்தப்படவில்லை. அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவான இன்று கூறுகிறேன், தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் திருட்டு திமுகவை ஒப்பிட முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “திமுக கூட்டணியில் அதிருப்தி தொடங்கிவிட்டது” - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக மருத்துவ அணி துணைச் செயலாளருமான டாக்டர் எம்.மணிகண்டன், "அடுத்த தேர்தலில் இமாலய வெற்றியை அதிமுக பெறும். பாஜக உடன் திமுக கள்ளக் கூட்டணி வைத்துச் செயல்பட்டு வருகின்றனர். பிரதமரின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதலின் படியே தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றமும், உதயநிதி துணை முதலமைச்சர் ஆனதும் அரங்கேறியது.
2018ஆம் ஆண்டில் உயர்த்தப்பட வேண்டிய சொத்து வரியை, மக்கள் நலனுக்காக உயர்த்தாமல் இருந்தோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த உடன் 150% சொத்து வரி உயர்த்தப்பட்டது. முறை தவறி மக்களிடம் வரி வசூல் செய்வது இரவு நேரத்தில் தடி வைத்து கொள்ளையடிப்பதற்குச் சமம். தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனையை திமுகவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும், கள்ளச்சாராய விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல, கச்சத்தீவை மீட்டால் தான் தமிழக மீனவர்களுக்கு ஒரு விமோச்சனம் கிடைக்கும். ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, 3 பேரை தமிழக காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் வெளியே தான் உள்ளனர். அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுங்கள்.
திருடன் கையிலே லாக்கர் சாவியைக் கொடுப்பது போல திமுகவை வைத்துக் கொண்டே விசிகவினர் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தியுள்ளனர். தேர்தலில் தனியாக நிற்பதன் மூலம் மக்கள் மனதில் எந்த இடத்தில் விசிக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினால் தமிழகத்தில் மாபெரும் கூட்டணி அமையும்" என்றார்.
அதையடுத்து பேசிய அமைப்புச் செயலாளர் என்.முருகுமாறன், "அதிமுக கூட்டணியை நம்பி களத்தில் நிற்கும் இயக்கம் அல்ல. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட அதிமுக தயாராகவுள்ளது. அதிமுக உடன் தன்னந்தனியாக திமுக தேர்தல் களத்தில் தயாரா?. தமிழ்நாட்டில் சாக்கடைக்கு வரி போடும் சாக்கடை ஆட்சி நடந்து வருகிறது. அண்ணா உருவாக்கிய திமுகவை திருக்குவளை முன்னேற்ற கழகமாக மாற்றியவர் கருணாநிதி. தற்போது, அதனை திருடர்கள் முன்னேற்ற கழகமாக மாற்றியுள்ளார் மு.க.ஸ்டாலின். அமைதியாக இருந்த தமிழ்நாட்டை 24 மணி நேரமும் கஞ்சா, மதுபாட்டில்கள் கிடைக்கும் மாநிலமாக திமுக மாற்றியுள்ளது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்