அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் கவுன்சிலர்களுக்கான சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்றத் தலைவர் சுமதி தலைமை தாங்க, ஆணையர், நகர மன்ற துணைத் தலைவர் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததைக் கண்டித்தும், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் கண்டித்தும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பினை தெரிவித்தனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் பல்வேறு அடிப்படை தேவைகளான குடிநீர் பிரச்சினை, சிமெண்ட் சாலைகளை அமைக்கும் பணிகள், தெருவிளக்குகள், காலி மனை உள்ளிட்ட முக்கிய தேவை குறித்து ஆணையரிடம் அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதில் அதிமுக கவுன்சிலர் செல்வராஜ், குடிநீர் இணைப்பு பொதுமக்கள் மனு அளித்தும் நீண்ட நாட்களாக அலைய விடுவதாகக் கூறினார்.
மேலும், கவுன்சிலர் சேகர், வீட்டு வரி, காலி மனை வரி, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் இரண்டு மூன்று மாதங்களாக அலைய விடுவதாகவும் அவர் குற்றம்சாட்டி பேசினார். பாமக நகரச் செயலாளர் ரங்கநாதன், அமைக்கப்பட்ட மயான கொட்டகைக்கு சாலை அமைத்து தர ஆணையரிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
அண்ணா சிலையில் இருந்து செந்துறை சந்திப்பு வரை மின் கோபுர லைட் அமைத்து எந்த பயன்பாடும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை உடனடியாக பயன்பாட்டிற்கு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நகராட்சி ஆணையர், கவுன்சிலருடைய கோரிக்கைகளை செவிகொடுத்து கேட்கவில்லை என குற்றம் சாட்டினர்.
இதனால் ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயங்கொண்டம் 6வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட நபர்கள் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்ததைக் கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நகராட்சி கூட்டத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து வந்தோம். ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய பகுதிகளில் கஞ்சா மற்றும் சாராயம் நடமாட்டம் அதிகளவு இருப்பதால், நகராட்சி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: கூட்டுறவுச் சங்கங்களில் “இ-தீர்வு” திட்டம்.. எதற்காக தெரியுமா? - TN Assembly Session 2024