சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முதலில் 11 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதில், ஆயுதங்களை பறிமுதல் செய்ய திருவேங்கடம் என்ற ரவுடியை அழைத்துச் சென்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் உள்ளவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற பல்வேறு கோணத்தில் செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொலைச் சம்பவத்தில் நேரடியாக தொடர்புடையவர்கள், மறைமுகமாக உதவியர்கள் என தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் இதுவரை சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான மலர்க்கொடி மற்றும் மற்றொரு வழக்கறிஞர் ஹரிஹரன், திமுக நிர்வாகி மகன் சதீஷ்குமார், பாஜக முன்னாள் நிர்வாகியான அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுவரையில் 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து, இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரிதரன் என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட ஹரிதரன் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும், இவர் அதிமுகவில் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது. மேலும், ஹரிதரன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரனும் நண்பர்கள் என தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இவ்வழக்கில் பயன்படுத்திய 6 செல்போன்களை அருள், ஹரிதரனிடம் ஒப்படைத்துள்ளார். செல்போன்களை யாருக்கும் தெரியாமல் தூக்கி எறியுமாறு ஹரிஹரன் ஹரிதரனிடம் தெரிவித்துள்ளார். அதன் பேரில், ஹரிதரன் 6 செல்போன்களையும் சேதப்படுத்தி, திருவள்ளூர் வெங்கத்தூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வீசியுள்ளார்.
இதனையடுத்து, தனிப்படை காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களின் உதவியுடன், கொசஸ்தலை ஆற்றிலிருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். முன்னதாக, அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/f99snV92GD
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) July 20, 2024
இந்த நிலையில், ஹரிதரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது! - Armstrong murder case