சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, கள்ளச்சாராய மரண வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிபிசிஐடி-யிடம் ஒப்படைத்துள்ளது. இந்த நிலையில், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''கடந்த 1886ல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் மெட்ராஸ் அப்காரி சட்டத்தின் கீழ் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. வெளிநாட்டு மதுபானங்களை ஊக்குவிக்க அமல்படுத்தப்பட்டாலும் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது''.
''1937ம் ஆண்டு தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ராஜகோபாலாச்சாரியால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. சுதந்திரத்துக்கு பின் 1948ல் ஒருங்கிணைந்த தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சி காலத்திலும் மதுவிலக்கு தொடர்ந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, 1971ல் மதுவை அனுமதித்தார். பட்டை சாராயம் மற்றும் கள் ஆகியவற்றை விற்க அனுமதி வழங்கப்பட்டது. 1974ல் பட்டை சாராயம் மற்றும் கள் விற்க தடை விதிக்கப்பட்டது''.
''கடந்த 2023ல் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். தற்போது 37 பேர் உயிரிழந்துள்ள கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், அதிகாரிகள் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போவதாக தெரிவிக்கிறார். ஆனால், மாவட்ட ஆட்சியர் (இடமாற்றம் செய்வதற்கு முன்பு) உயிரிழப்புக்கு கள்ளச்சாராயம் காரணமில்லை என முரண்பாடாக தெரிவித்தார்''.
''அதனால், நீதிமன்றம் நேர்மையாக பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணையும், எதிர்காலத்தில் தவறுகள் நடக்காமல் தடுக்க சிறப்பு துறை விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நாளை (ஜூன் 21) நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக அரசு வடமாவட்டங்களை சுடுகாடாக மாற்றியுள்ளது"- கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சீமான் ஆவேசம்!