தூத்துக்குடி: இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேருவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் (Agnipath Scheme) திட்டத்திற்கான முகாம், தூத்துக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் இரவு பகலாக தேர்வு பணி நடைபெற்று வருகிறது.
இந்திய ராணுவத்திற்கு 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வகையில், "அக்னிபாத்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தால் ஜூன் 2022 அன்று அங்கீகரிக்கப்பட்டு, பிறகு செப்டம்பரில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், ஆண்டு தோறும் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான தேர்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் இந்த அக்னிபாத் திட்டத்தில் சேர 18 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், அந்த இளைஞர்களுக்கு 1,600 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடையைத் தாண்டி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜூலை 1 முதல் நடைபெறும் இந்த ஆட்கள் தேர்வு முகாம் ஜூலை 5-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் சுமார் மூவாயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.