சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலைய மேலாளர் அறைக்கு இன்று (ஜூன்.15) பகல் 2 மணி அளவில் தொலைப்பேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து விமான நிலைய மேலாளர் உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குனர் மற்றும் வெடிகுண்டுகள் கண்டறியும் நிபுணர்கள் குழு ஆகியோருக்கு அவசர தகவல்கள் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் உயர் அதிகாரிகள் மதியம் 2.30 மணி அளவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அந்தக் கூட்டத்தில் விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகள் கண்டறியும் நிபுணர் குழுவினர் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டல் வழக்கமான புரளியாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புகள் மற்றும் சோதனைகள் நடந்து வருகின்றன. மேலும், விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டு நிபுணர்களும், சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "கடந்த இரண்டு வாரங்களாக இது போன்ற வெடிகுண்டு புரளிகள் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கின்றன. அதைப்போல் இதுவும் புரளியாகத் தான் இருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்பு சோதனைகளை தொடங்கி நடத்தி வருகிறோம்.
இதனால் விமானச் சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இதைப் போன்ற புரளியைக் கிளப்பி விடும் நபரைக் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேருந்து படியில் FootBoard அடிக்கும் பெண்கள்.. போரூர் பேருந்து நிலையத்தில் அவலம்! - Women food boarding in bus