ஈரோடு: கடந்த 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கீடு செய்த போது, உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று, திமுக எம்பியாக இருந்தவர் அ.கணேசமூர்த்தி. தற்போது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போதிலும், எம்பி கணேசமூர்த்தி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் போன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 24ஆம் தேதி கணேசமூர்த்தி தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ ஆகியோர் கோவை மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எம்பி கணேசமூர்த்தி, இன்று (மார்ச் 28) அதிகாலை 5.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக எம்பி கணேசமூர்த்தியின் உடலை ஈரோடு நகர போலீசார், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, உடற்கூறு ஆய்வுக்குப் பின், கணேசமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான பூந்துறை அருகே உள்ள குமாரவலசுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக, மருத்துவமனை வளாகத்திலேயே அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் எம்பி சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட பலரும் மாலை அனிவித்து வீர வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கரூர் எம்பி ஜோதிமணி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மறைந்த கணேசமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மதிமுகவின் கொடியை கணேசமூர்த்தி உடல் மீது போர்த்திய வைகோ, முழக்கத்துடன் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து, இன்று மாலை 5 மணி அளவில் அவரது உடல், சொந்த ஊரில் உள்ள அவரது தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
உயிரிழந்த எம்பி கணேசமூர்த்தி அரசியல் கட்சி நிர்வாகியாக மட்டுமின்றி, சமூக ஆர்வலராகவும், விவசாயிகள் நலன் சார்ந்து விவசாயிகளின் பல்வேறு போராட்டத்தில் பங்கேற்று அவர்களுக்கு உரிய தீர்வையும் பெற்று தந்துள்ளார். குறிப்பாக கெயில், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் விவசாய விளை நிலங்கள் வழியாக, குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று, உரிய தீர்வு கண்டுள்ளார்.