சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பு மற்றும் எழும்பூர் வழக்கறிஞர் விஜயகுமார் தரப்பு ஆகியோர் வழக்கு ஒன்று தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், இரு தரப்பினரும் அங்கிருந்த நாற்காலி, கற்களை வீசி மாறி, மாறி தாக்கிக் கொண்டனர்.
இச்சம்பவத்தில் நான்கு வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த எழும்பூர் போலீசார், நீதிமன்ற வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும், வழக்கறிஞர் விஜயகுமார், விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கறிஞர்கள் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கரின் ஆட்கொணர்வு மனு.. ஜூலை 23-ல் விசாரணை! - Savukku Shankar case