சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் சேர்க்கை ஒற்றை இலக்கத்திற்கு சரிந்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
அதற்கு காரணத்தை தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கம், பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக மானிய குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளுக்கு முரணான இந்த உத்தரவினால், முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆய்வு மாணவர்கள் முன் வருவதில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
பன்னாட்டு ஆய்வு கட்டுரைகள் வாயிலாகப் பெறப்படும் தரவுகளை சேகரிக்க பல லட்சம் செலவிட வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கம், ஏழை எளிய மாணவர்கள் பயிலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் இது போன்ற அதிகபட்ச தொகையை செலவிட முடியாமல் பல மாணவர்கள் தங்களின் ஆய்வினை பாதியிலேயே நிறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், "ஆராய்ச்சிக்கான நிதியின் பெரும் பங்கினை பல்கலைக்கழக மானிய குழு மற்றும் இந்திய சமூக அறிவியல் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகம் போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. மாநில பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு நிதியை சொற்பமாக வழங்குவதால், பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.