தேனி: கூடலூர், லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும், தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 1ஆம் தேதி காலை அணையிலிருந்து பாசனத்திற்கு 200 கனஅடி, தேனி மாவட்ட குடிநீருக்கு 100 கனஅடி என மொத்தம் 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது.
இந்நிலையில், அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து கூடுதலாக தற்போது 511 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து 317 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 118.95 அடி, கொள்ளளவு 2439 மில்லியன் கனஅடியாக உள்ளது.
இதனிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 390 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு தற்போது 1500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேனியில் வெறிநாய் கடித்து பள்ளிச் சிறுவன் உட்பட 10 பேர் காயம்! - Dog Bite Issue