சென்னை: தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபட்ட புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் ஏற்கனவே உள்ள ஆறு பேருடன் கூடுதலாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்களை இணைத்து சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த வி.எஸ்.குறிஞ்சிச்செல்வன், வணிக வரித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்த எஸ்.கணேசன், சுகாதாரத்துறை அதிகாரிகளான டாக்டர்.லக்ஷ்மி நாராயணன், காவல்துறை உதவி ஆணையராக இருந்த ஆர்.மன்னர் மன்னன், காவல் ஆய்வாளராக இருந்த வி.சம்பத், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டபட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்பு கடந்த செப் 9ம் தேதி விசாரணைக்கு வந்த போது சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, ஓய்வு பெற்ற டிஜிபிக்கள், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 25பேர் நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போது குற்றப்பத்திரிக்கை நகல் தயராகவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு விசாரணையை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க : குட்கா முறைகேடு வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்; காரணம் என்ன? - gutka scam case
இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு இன்று( செப் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிக்கை நகல்களை தாக்கல் செய்தார். சுமார் 250 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கை உடன் ஆவணங்கள் என சுமார் 20 ஆயிரம் பக்கங்களை தாக்கல் செய்தார். ஆவணங்கள் பென் டிரைவில் தாக்கல் செய்தார்.
இதற்கு ஆவணங்கள் அனைத்தும் காகிதத்தில் வழங்க வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணை அக்டோபர் 14ம் தேதி தள்ளிவைத்த நீதிபதி அன்று கூடுதல் குற்றப்பத்திரிக்கை பெற குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.