வேலூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகை குஷ்பூ நேற்று பிரச்சாரம் மேற்கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து நடிகை குஷ்பூ கூறுகையில், "திமுகவில் எந்த பெண்களும் மகிழ்ச்சியாக இல்லை. திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நல்ல திட்டத்தையும் செய்யவில்லை என்று அவர்களே உறுதியாக கூறுகின்றனர்.
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கனிமொழி எம்.பி கூறியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் திமுகவில் இருந்து வந்திருப்பவர். திமுகவில் பாதுகாப்பில்லை என்பதால் தான் நான் அக்கட்சியிலிருந்து வெளியில் வந்தேன். அங்கு பாதுகாப்பு இருந்திருந்தால் நான் ஏன் வெளியில் வந்திருக்க போகிறேன்? என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. தொடர்ந்து கடன் கேட்டுள்ளனர். இவர்களது ஆட்சியில் இதுவரை 5 லட்சம் கோடிக்கு மேலாக கடன் வாங்கியுள்ளனர். அவற்றை எங்கே செலவு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அரசின் நல திட்டங்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் திமுகவின் செயல்பாடு கேவலமாக உள்ளது. கல்யாண வீட்டில் யார் மாப்பிள்ளை என்று தேடுவது போன்று இந்தியா கூட்டணி உள்ளது. பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. மாப்பிள்ளை யார் என்று தெரியாமல் கல்யாணத்தை நடத்தப் போகிறோம் என இந்தியா கூட்டணி பேசி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை பார்த்து 29 பைசா என்று கூறுவது அவர்களின் கீழ்த்தரமான யோசனையை காட்டுகிறது” என்றார்.
பிரதமர் மோடி பார்ட் டைம் அரசியல்வாதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “உலகத்தின் மிகச் சிறந்த தலைவராக மக்கள் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர். குடும்ப அரசியல் மூலமாக மோடி பிரதமராகவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குடும்ப அரசியலால் அனைத்தும் அவரது கைக்கு வந்ததுள்ளது என்றார்.
கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். அவரை எதிர்த்து ஏன் முதலமைச்சர் கேள்வி கேட்பதற்கு பயப்படுகிறார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், சமூக நீதி பற்றி பேச பாஜகவிற்கு தகுதி இல்லை என்று திருமாவளவன் கூறியது குறித்து கேட்டதற்கு, அவருக்கு பதில் சொல்ல எனக்கு விரும்பவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் வருகிற 17 ஆம் தேதி வரை உள்ளது. தமிழகத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கேரளாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். அதைத் தொடர்ந்து வட இந்தியாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
2026 - ல் உங்களை வேட்பாளராக எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, முதலில் இந்த தேர்தல் முடியட்டும் பிறகு பார்க்கலாம் என்றார். அரண்மனை 4 படம் குறித்து கேட்டதற்கு இது அரசியல் மேடை அரசியல் மட்டும் பேசுவோம். சினிமா தொடர்பாக நிகழ்ச்சியில் சினிமா குறித்து பேசுவோம்" என்றார்.