சென்னை: சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று (நவம்பர் 3) பிராமண சமூகத்தின் மீது தொடரும் அவதூறுகளை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி ஷங்கர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது குறித்து இன்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிடர்களை தான், நான் அவ்வாறு சொன்னேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “மாற்று மதத்தினரை எப்போதும் குறை சொல்லி பேசக்கூடாது. அப்படி பேசினால் அவர்களுக்கு எவ்வளவு வலிக்கும், அதேபோல அவர்களும் பேசுவது இழிவுபடுத்துவது தவறானது. பொதுவாகவே இங்கு இருப்பவர்கள் பழிவாங்கும் நோக்கத்தில் பேசுகிறார்கள்.”
“தெலுங்கு மக்களை பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. நேற்று நான் பேசும் போது தெலுங்கு மக்கள் என்று சொல்லவில்லை. பொதுவாகத் தெலுங்கு பேசுபவர்கள் என்று தான் சொன்னேன். ஒரு பிராமணர் கருவறையில் தவறு செய்கிறார் என்றால், எல்லா பிராமணர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்று தமிழ்நாடு முழுவதும் சொல்வது தவறு. அனைத்து செய்தி நிறுவனங்களையும் தூண்டிவிட்டு தவறான தகவல்களை அனுப்பி அவதூறுகளை பரப்புவது திமுகவின் தொழில்நுட்ப குழுவின் வேலை தான்.”
படாத இடத்தில் பட்ட தீக்காயங்கள்; இளைஞரின் வாழ்க்கையை முடித்த பந்தயம்!
“வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கன், தெலுங்கர் தான்; தமிழர் இல்லை. ஆனாலும், இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர் அவர். இங்கு இருக்கக்கூடிய திராவிட இயக்கங்களும், சனாதன எதிர்ப்பாளர்களும் தான் இன்று அனைவரையும் பிரித்து பார்க்கின்றனர். நாங்கள் அவ்வாறு பார்ப்பதில்லை.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசியவர், “வீட்டில் தாங்கள் சாமியை கும்பிட்டு விட்டு, யாகம் செய்துவிட்டு வெளியே வந்து நாத்திகம் பேசுபவர்கள் திமுகவும் திராவிட கழக உறுப்பினர்களும் தான். வீட்டிற்குள் தெலுங்கு பேசிக்கொண்டு, வெளியில் தமிழர்கள் என்றும், திராவிட கழகம் என்றும் பேசிக் கொண்டிருப்பவர்கள் திமுக தான்.”
“முன் நாள்களில் பிராமண சமுகம் மேலே தான் இருந்தது. ஆனால் அதை தற்போது கீழே இழுத்து தள்ளிவிட்டு மேலே வரவிடாமல் தடுக்கிறீர்கள். கடந்த வாரம் தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை இடம் பெறாததை குறித்து அவதூறு பரப்பினார்கள். எங்கள் அமைச்சரவையில் பார்ப்பானுக்கு இடமில்லை என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் பிராமணர்களை ஏன் தள்ளி வைக்கிறீர்கள். தமிழ்நாட்டு அரசியல் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஏன் தெலுங்கு மக்களிடம் பரப்புகிறீர்கள்.”
“பாசிசம் என்றால் என்ன தெரியுமா?"- எச்.ராஜா கொடுத்த விளக்கம் இதுதான்!
“பிராமணர்களுக்கு நடக்கக்கூடிய அநியாயங்களை தான் நான் தட்டி கேட்கிறேன். பிராமணர்களுக்கு எதிராக திராவிடர்கள் கூறும் பொய்யை யாரும் நம்ப வேண்டாம். எத்தனையோ திராவிட பொய்களில் இதுவும் ஒன்று. தெலுங்கு மக்களின் அன்புக்கு பாத்திரமாகி இருக்கிறேன். நான் தெலுங்கு வீட்டின் மருமகள், நான் ஏன் அவ்வாறு பேச போகிறேன்.”
“ராஜ தர்பாரில் ஆடல் அரசிகளுக்கு இசை மற்றும் சங்கீத வாத்தியங்கள் வாசிப்பவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று கலைஞர் அன்று கேட்டார். திமுக கூட்டணியில் இருக்க கூடிய வைகோ தெலுங்கர்களை தவறாக பேசினார். இவ்வளவு நாள் லட்டு பிரச்சினை வந்தபோது அனைவரும் தெலுங்கு மக்களை விமர்சித்தீர்கள். இப்போது திடீரென்று தெலுங்கு மக்கள் மீது எப்படி உங்களுக்கு கரிசனம் வந்தது.”
“ஐயர், ஐயங்கார் என்ற உட்பிரிவுகளை வேறு எங்குமே நாம் பார்க்க முடியாது. பிராமணர்கள் மற்றவர்களை ஒடுக்கினார்கள் என்று சொல்வது பொய். நான் நேற்று பேசியது எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இப்போது நான் பேசுவதற்கு கூட திமுக என்ற வார்த்தையை வைத்து என் மீது வழக்குப்பதிவு கூட செய்ய முடியாது. பிராமணர்களை தமிழர்களின் எதிரி என்று சொல்லக்கூடிய சித்தாந்தவாதிகளை என் உயிர் மூச்சு உள்ளவரை எதிர்ப்பேன். திராவிடம் என்பது நில அமைப்பு மற்றும் மரபு. திராவிடியம் என்பது பிராமண வெறுப்பு, கடவுள் மறுப்பு, சனாதன ஒழிப்பு ஆகும்," என்று நடிகை கஸ்தூரி விளக்கமளித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.