கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சுங்கம் பகுதி சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மருவரசி வளாகத்தின் இரண்டாவது தளத்தில் நிமிர்வு கலையகம் சார்பில், நாட்டார் கலை ஆட்டங்களுக்கான தனியொரு முதன்மை அரங்கம் (Folk Studio) இன்று திறக்கப்பட்டது. இதனை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நாட்டார் கலைஞரும், திரைப்பட நடிகையுமான தீபா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இங்கு பறை இசை ஆட்டம், துடும்பு இசை ஆட்டம், ஒயிலாட்டம், உடுக்கை இசை, பெட்டிப்பறை, நாட்டார் பாடல்கள், செண்டைமேளம், சதிராட்டம் (பரதம்), செவ்வியல் இசை, மேற்கத்திய ஆட்டம், சிலம்பம், அடிமுறை களரி, வள்ளி கும்மி ஆகியவை பயிற்றுவிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகை தீபா சங்கர், "அனைத்து கலைகளுக்கும் மூல ஆதாரமாக இருப்பது கிராமியக் கலைகள் தான். அது சில பேருக்கு புரிவதில்லை. டெய்ரி மில்கிற்கு தரும் மதிப்பை கடலை மிட்டாய்க்கு கொடுப்பதில்லை. தற்போது கிராமியக்கலைகள் அழிந்து வருகிறது. தப்பாட்டத்தை சாவு வீடுகளில் தான் அடிப்பார்கள் என தப்பாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது படித்த இளைஞர்கள் பறையை கையில் பிடித்திருப்பதைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது பாமர மக்களுக்கான கலை மட்டும் கிடையாது, இது அனைவருக்கும் தெரிய வேண்டும். அதற்கு முதலில் படித்தவர்கள் இதனை தெரிந்து கொண்டாலே அனைவரையும் சென்றடையும். அதுமட்டுமல்லாது, கிராமியக் கலைகளுக்கு நாம் அனைவரும் இணைந்து ஆதரவு தர வேண்டும்.
மீண்டும் அது பெரிய வளர்ச்சியடைய வேண்டும். நம் குழந்தைகள் எல்லாம் அது என்னது என்று கேட்டுவிடக்கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் இசை கல்லூரிகள் இருக்க வேண்டும். கல்யாண வீடுகளில் எல்லாம் நைய்யாண்டி மேளங்களை கேசெட்டுகளில் போட்டு விடுகின்றனர். அப்படி செய்ய வேண்டாம். அந்த தொழிலை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அரசாங்கம் இதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க : "150 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நேரத்தில்.."- சு.வெங்கடேசன் கூறியது என்ன? - Three NEW CRIMINAL LAWS