சென்னை: பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழாவில் இன்று பேசிய விஜய் கூறியதாவது; ''கடந்த மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் சில குளறுபடிகள் நடந்துள்ளதை செய்திகளில் பார்த்தோம். இதனால் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை மக்களிடம் இருந்து போய்விட்டது. இதற்கு நீட் விலக்கு மட்டும் தான் உடனடி தீர்வாக இருக்கும். நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிராக உள்ளது 1975 முன்னாள் வரை கல்வி மாநில பட்டியலில் இருந்தது. ஒன்றிய அரசு வந்தது பிறகு பொது பட்டியலில் அதை சேர்த்தார்கள். அதுதான் முதல் பிரச்சினை.
இரண்டாவதாக ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் இந்தத் திட்டம் என்பது கல்வி கற்பதற்கு நோக்கத்திற்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். மாநில உரிமைக்காக மட்டுமல்ல கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பார்வைகள் இருக்கிறது. அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிச்சயமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய பார்வை.. பன்முகத் தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல.
மேலும், நீட் ரத்துக்கோரி தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு எந்த கால தாமதமும் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நீட் விலக்கை அமல் படுத்த வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு தேசிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுவது கடினம்.
அதேபோல, இதற்கு நிரந்தர தீர்வு என்னவென்றால், கல்வியை பொதுபட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அதற்கு ஏதாவது சிக்கல் இருக்கும் பட்சத்தில் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி 'சிறப்பு பொதுப்பட்டியல்' என்று உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.
பொது பட்டியலில் உள்ள துறைகளை பார்த்தால் மாநில அரசுக்கு அதில் அதிகாரம் இருந்தாலும் முழுக்க முழுக்க அவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுக்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். குறிப்பாக, ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற மருத்துவ கல்லூரிகளுக்கு வேண்டுமானால் நீட் தேர்வு நடத்திக்கொள்ளலாம்.
இதெல்லாம் உடனே நடக்காது என்று எனக்கு தெரியும், அப்படியே நடந்தாலும் அதை நடக்க விட மாட்டார்கள் என்றும் எனக்கு தெரியும். இருந்தாலும், இந்த சந்தர்ப்பத்தில் நீட்டை பற்றிய எனது கருத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மாணவர்கள், ஜாலியாக படியுங்கள்.. ஸ்ட்ரெஸ் எடுத்துக் கொள்ள வேண்டாம்.. உலகம் மிகப் பெரியது. அவ்வளவு வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் ஜாலியாக படிக்க வேண்டும் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் மீண்டும் சந்திக்கும் வரை நன்றி'' எனக்கூறி விஜய் தனது உரையை முடித்தார்.
இதையும் படிங்க: LIVE: தமிழக வெற்றிக் கழகம் 'தளபதி விஜய் கல்வி விருது' விழா நேரலை