சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். நடிப்பு மட்டுமின்றி தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாக தனது மக்கள் இயக்கத்தினை அரசியல் நகர்வை நோக்கி நகர்த்தி வருகிறார்.
அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து வழங்கினார். இந்நிகழ்வில் நடிகர் விஜய் பேசியது மற்றும் அவர் நீண்ட நேரம் நின்று மாணவர்களுக்கு பரிசளித்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
அதேபோல், தமிழகத்தின் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில், குறிப்பாக கிராமங்களில் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் 'தளபதி விஜய் பயிலகம்' எனும் இரவு நேர பாடசாலை திட்டம், பல்வேறு பகுதிகளில் இலவச சட்ட ஆலோசனை மையம், 'தளபதி விஜய் நூலகம்' எனும் நூலகம் ஆகியவை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திறக்கப்பட்டன.
மேலும், மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் ஆகிய விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் வழங்கப்பட்டன.
அவ்வப்போது, இயக்கத்தின் வழக்கறிஞர் அணி, மகளிர் அணி என அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தார். அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று (ஜன.25) பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில், நடிகர் விஜய் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இக்கூட்டத்தில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். நடிகர் விஜய் நடத்தியுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த ஆலோசனையில் இதுவரை இல்லாத வகையில், நடிகர் விஜய் அரசியல் குறித்து நிர்வாகிகளிடம் திட்டவட்டமாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதேபோல் ஒரு மாத காலத்திற்குள் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது.
மேலும், ஆலோசனையின் போது முதலில் அரசியல் கட்சியாக பதிவு செய்த பின்னர், யாருக்கு ஆதரவு கொடுக்கலாம் அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பாரத் நியாய யாத்திரை: அசாமில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!