கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோயில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோயில் ஆகும். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டாரப் பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் பொழுது இந்த கோயிலுக்கு நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று (நவ 27) நடிகர் சூர்யா இக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த சூர்யாவிற்கு கோயில் அறங்காவலர் குழு முரளி கிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மாசாணியம்மன் பாலாயம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்குப் பின் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பின், அங்கிருந்த மக்கள் நடிகர் சூர்யாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
இக்கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளதால், கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காமெடி நடிகர் யோகிபாபு இக்கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நேற்று( நவ 26) சூர்யா, ஜோதிகா தம்பதியினர் கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த 20ம் தேதி நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க : சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் 'கங்குவா' இயக்குநருடன் நடிகர் சூர்யா சாமி தரிசனம்!
நடிகர் சூர்யா, இயக்குநர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த நவ 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இரைச்சல் அதிகமாக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், படக்குழுவினர் சத்தத்தை குறைப்பதாக அறிவித்தனர். மேலும், படத்தின் மீது எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக எழுந்தன.
இந்நிலையில் தான் சூர்யா நடிக்கும் 'சூர்யா 45' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் - சூர்யா கூட்டணி சில்லுனு ஒரு காதல், ஆயுத எழுத்து மற்றும் '24' படத்தை தொடர்ந்து, நான்காவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பானது கோயம்புத்தூரில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த திரைப்படம் 2025ம் ஆண்டு பாதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் போன்ற படங்களை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், தனது 44 வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்