சென்னை: நடிகர் வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை என நடிகர் சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை குறித்து அவதூறாகப் பேசியதற்காக ஐந்து கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாகப் பேசத் தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஜாபர் சாதிக் வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிமன்றம்!
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று (டிசம்பர் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைப் பதிவு செய்த நீதிபதி, பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.