விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக உறுப்பினர் புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதி காலியான தொகுதியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, திமுக, பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இன்று (ஜூலை 8) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. இந்த நிலையில், நேற்று விக்கிரவாண்டியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும், பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது திறந்தவெளி வாகனத்திலிருந்து பேசிய சரத்குமார், "ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் எல்லாம் சம்பாதித்துவிடலாம். நான் சம்பாதித்திருக்கிறேன், காலையில் பேப்பர் போடுவேன். சைக்கிள் கடையில் ஃபிட்டராக வேலை பார்த்துள்ளேன். தொடர்ந்து உண்மையாக உழைத்திருக்கிறேன். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது. பிறகு உங்களால் உயர்ந்தேன். காரணம் படங்களைப் பார்த்து ரசித்தீர்கள்.
விக்கிரவாண்டியில் மக்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தமிழ்நாட்டில் 30 நாள்களில் சுமார் 130 கொலைகள் நிகழ்ந்துள்ளன. தமிழக உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டு இதைத் தடுத்திருக்க வேண்டும்.
திமுக தோல்வி பயத்தில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 15-க்கும் மேற்பட்ட அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும் தேர்தல் பணியாற்ற செய்து வருகிறது. தற்போது பிரதமர் மோடியின் வழிகாட்டுதலால் இந்தியா வல்லரசாகி வருகிறது. மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தொடரும் செயலற்ற ஆட்சியின் அடையாளமாகத்தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
திராவிடக் கட்சிகள் தொடர்ந்து சுமார் 65 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. ஆனால், விக்கிரவாண்டியில் தொழிற்சாலை, கல்விக்கேற்ற வேலை, அதற்கேற்ற ஊதியம் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சியும், காட்சியும் மாற வேண்டும் என்றால் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வாக்களிக்க வேண்டும்.
ஜனநாயகமா?.. பணநாயகமா?.. என்றால், இன்று எங்கு பார்த்தாலும் பணநாயகம் தான் உள்ளது. 1996ஆம் ஆண்டு முதல் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். அதிமுக, திமுக எனப் பிரச்சாரம் செய்த நான், காலத்தின் கட்டாயத்தால் தற்போது இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் இணைந்துள்ளேன்.
தலைவர் பதவியிலே இருந்துகொண்டு ஒருவர் உறுப்பினர் ஆகிறார் என்றால், எந்த அளவிலே இந்த இயக்கத்தின் மீது பாஜக மீது, பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்திருந்தால் அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பேன் என சிந்தியுங்கள். கள்ளக்குறிச்சியில் அரசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் கடத்த முடியுமா? கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் பல இடங்களில் சிறப்பான தொழிலாக நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல, போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. ஆனால், காவல்துறையினர் எதை கட்டுப்படுத்துவார்கள், யார் சொல்வதை கேட்பார்கள். தற்போது ஆளுங்கட்சியில் என்ன சொல்கிறார்களோ அதை சொல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். பல குற்றங்கள் நடப்பதற்குக் காரணம் போதை தான், ஆகையால் முதலில் மதுவை ஒழிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்" எனப் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.