சென்னை: இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள என்னுடைய அருமை நண்பர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். அதேபோல் மற்றொரு நண்பர் சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். டெல்லியில் பதவி ஏற்பு நிகழ்வுக்குச் செல்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆன்மிகப் பயணமாக ரிஷிகேஷ், பத்ரிநாத், பாபா குகை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றேன். அருமையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஸ்ரீ சந்திரபாபு நாயுடு மற்றும் மிகவும் மதிப்பிற்குரிய அன்பான நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக 234 தொகுதிகளை கைப்பற்றியது.
மேலும், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், சந்திர பாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "தமிழ்நாடு பாஜக ஒரு பூஜ்ஜியம் என்பது நிரூபணமாகியுள்ளது" - எஸ்.வி.சேகர் சாடல்! - S Ve Shekher