திருவாரூர்: நடிகர் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை மூலம் ‘மாற்றம்’ என்ற பெயரில் மே 1ஆம் தேதி முதல் சேவை அமைப்பைத் தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து, அதன்படி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கடகம்பாடி பகுதி விவசாயிகளுக்கான டிராக்டர் சாவியை, ராகவா லாரன்ஸ் மூலம் 5ஆம் வகுப்பு முதல் படிக்க வைக்கப்பட்டு, தற்போது லயோலா கல்லூரியில் டிஜிட்டல் ஜர்னலிசம் (Digital Journalism) படித்து வரும் கடகம்பாடியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற மாணவனிடம் ஒப்படைத்தார்.
அப்போது பேசிய அவர், “உங்களிடம் இதைச் செய்கிறேன், நீங்க அதை போடுங்க என்று கேட்பதற்கு நான் வரவில்லை. கொடுக்கத்தான் வந்திருக்கிறேன். தொடர்ந்து, டிராக்டரை கிராமம் முழுவதும் உள்ள அனைத்து ஏழை விவசாயிகளும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார். முன்னதாக, அவருக்கு அந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ், “சேவைக்கு வரும் போது மக்கள் கொடுக்கின்ற வரவேற்பு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதனைப் பார்க்கும் பொழுது தொடர்ந்து சேவைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இப்பகுதியில், விதவைப் பெண்கள் தங்களது மனுக்களில் எங்களுக்கு தையல் இயந்திரம் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.
இதனால், அடுத்தபடியாக 500 தையல் இயந்திரம் கொடுக்கலாம் என்கிற திட்டம் இருக்கிறது. இப்போது தான் இந்த அமைப்பை தொடங்கியுள்ளோம். இந்த அமைப்பில் தற்போது இணைந்திருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, கே.பி.ஒய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் சூப்பர் ஸ்டார் எனது குரு, அவர் பாராட்டு தெரிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அரசியல் பயணம் தொடருமா? என்கிற கேள்விக்கு, ஐயோ தலைவா அரசியலா என்று கையெடுத்து கும்பிட்டபடி மாற்றம் போதுமென்ற எண்ணம், தன்னலமற்ற சேவை, சேவையை கடவுள். வாழ்வோம் வாழ வைப்போம் என்று கூறி, இதில் எங்குமே அரசியல் இல்லை, முழுக்க முழுக்க சேவை மட்டும்தான்” என அவர் கூறினார்.
இதையும் படிங்க: 810 கிலோ தங்கத்துடன் கவிழ்ந்த லாரி! ஈரோட்டில் நள்ளிரவு பரபரப்பு - ERODE GOLD VAN ACCIDENT