சென்னை: பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை அவதூறாகப் பேசுவது போல் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த ஆடியோவை பாடகி சுசித்ராவின் ( Suchitra ) கணவர் நடிகர் கார்த்திக் குமார் (Karthik Kumar) என்பவர் பேசியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே நடிகர் கார்த்திக் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தனது குரலில் பேசிய ஆடியோ தான் பேசியது இல்லை எனவும், சித்தரிக்கப்பட்டு ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்திக் குமார் தற்போது, மயிலாப்பூர் காவல் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், "சமூக வலைத்தளத்தில் பரவும் ஆடியோ நான் பேசியது இல்லை. மர்ம நபர் யாரோ ஒருவர் தனது குரல் போன்று சித்தரித்து அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர். உடனடியாக அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அந்த ஆடியோ பதிவில் குழந்தைகள் சத்தம் கேட்பதாகவும், தனக்கு குழந்தைகள் யாரும் இல்லை” என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தான் பெண்களைப் பற்றி தவறாக பேசக்கூடிய ஆள் இல்லை என்றும், அந்த ஆடியோவில் பேசியது தான் என எண்ணி சிலர் தன்னை மிரட்டி வருவதாகவும், உடனடியாக அதனைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இதனால் தனது பெயருக்கும், தனது குடும்பத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும், அந்த மர்ம நபரை விரைவில் கண்டறிந்து அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியல் இன ஆணையம் 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்திக் குமார் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கல்வி 'கலைஞர்' மயமாக்கப்பட்டு வருகிறது - தமிழிசை சௌந்தரராஜன் சாடல்! - TAMILISAI SOUNDARARAJAN BJP