ஹைதராபாத்: அதிமுக 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அக்கட்சிக்கு ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழில் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நன்நாளில், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட எம்ஜிஆர்: 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் நாள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் தொடங்கிய அஇஅதிமுக தமிழ்நாட்டில் மிக குறுகிய காலத்தில் ஆற்றல்மிக்க அரசியல் சக்தியாக உயர்ந்து ஆட்சி கட்டிலிலும் அமர்ந்து வரலாறு படைத்தது. எம்.ஜி.ஆர் அவர்கள் எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு ஆழமான அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
பசி அறியாது, ஒவ்வொருவரும் கண்ணியமாக வாழ்வதை உறுதிப்படுத்த வரலாற்று சிறப்பு மிக்க பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தினார். தொலைநோக்கு கொண்ட அவரது எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களே அவரது பெருமைக்கு இன்றும் சான்றாக திகழ்கின்றன. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை தனது நிர்வாகத்தின் இரு கண்களாக கருதி அவர் செயலாற்றியதே தமிழ் நாட்டை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றியது.
இதையும் படிங்க: “Let's wait and see”.. பவன் கல்யாண் பேச்சுக்கு உதயநிதி பதில்!
அந்நேரத்து மக்கள் பிரச்சனைகளை, உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதோடு நில்லாமல், தொலை நோக்கோடு சீரான நீண்டகால வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு அவர் செயலாற்றினார். நல்லாட்சிக்கும் நிர்வாகத்திற்கும் புரட்சித் தலைவரை எனது ஆசானாக நான் கருத இதுவே காரணம். புரட்சித்தலைவரின் மறைவுக்கு பிறகு அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை கட்டிக்காத்ததோடு மட்டுமல்லாது தொலைநோக்கு கொண்டு தனது நிகரில்லா தலைமையால் மேலும் பல சாதனைகளை படைத்த பெருமை புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களை சாரும்.
On the 53rd anniversary of @AIADMKOfficial, I extend my sincere congratulations to the party leadership, members, and supporters. Founded on October 17, 1972, by the legendary “Puratchi Thalaivar” Thiru MG Ramachandran (MGR) Avl. #AIADMK rapidly became a formidable political… pic.twitter.com/YFXbXZcngz
— Pawan Kalyan (@PawanKalyan) October 17, 2024
அண்ணா வழியில் ஜெயலலிதா: "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தமிழக மக்களுக்காக அர்ப்பணிப்புடனும் தாயன்புடனும் அவர் செய்யலாற்றியதே தமிழக மக்கள் அவரை “அம்மா” என்று அன்போடு அழைக்க காரணமானது. 'ஒன்றே குலம்' என்ற அண்ணா வழியில் அண்டை மாநில மக்கள் மீதும் புரட்சித் தலைவி கொண்டிருந்த மரியாதை போற்றுதலுக்குறியது. தெலுங்கு மொழியில் சிறந்த புலமை கொண்டிருந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா எம்மக்கள் மீதும் மிகுந்த அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியது, மகாகவி பாரதியார் எழுதிய "சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்” என்ற ஒருமைப்பாட்டை பறை சாற்றும் வரிகளை நினைவூட்டும் வகையில் அமைந்தது.
இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் வாழ்த்து: எடப்பாடி பழனிசாமியின் ஆற்றல் மிக்க, சிறந்த தலைமையின் கீழ், எம்.ஜி.ஆர் கொள்கைகளை அஇஅதிமுக தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் போதிலும் இக்கட்சி தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களின் உரிமைக்குரலாய் எம்.ஜி.ஆர் வழியில் இன்றும் திகழ்கிறது. புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதாவின் காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும் அதிமுக அரசின் முதலமைச்சராக அவரது வழியில் சிறப்பாக செயலாற்றிய ஓ. பன்னீர் செல்வம் அவர்களுக்கும் இந்த நன்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனசேனா கட்சி சார்பாக அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர் அவர்களின் கனவுகளை நிறைவேற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வழியில் அஇஅதிமுக தமது பாரம்பரியத்தை நிறைவேற்ற வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் போராட்ட குணத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் பூமி தமிழ் நாடு. சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்த புன்னிய பூமியான தமிழகம் அவர்களின் அருளாசிகளால் என்றும் தழைத்தோங்கட்டும்,"என்று கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்