சென்னை: சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நந்தனம் கலை அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இப்பணிகளை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட வாக்குச்சாவடிக்குத் தேவையான பொருட்களை அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், "நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்நிலையில், இன்று (ஏப்.18) சைதாப்பேட்டை தொகுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லும் பணி தொடங்கியது.
அந்த வகையில், 299 மண்டலக் குழுக்களுக்கு 16 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான படிவங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவி பேட் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் போது துப்பாக்கி ஏந்திய போலீசாரும் உடன் செல்வர். தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அதிகாரி அமித் ஐஏஎஸ். இவர் சோழிங்கநல்லூர் தொகுதியும் தனியாக கவனிப்பார்.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியை வடசென்னை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அதிகாரி கவனிப்பார். தேர்தலில் பணியாற்ற உள்ளவர்களுக்கான வாக்குச்சாவடி பணி இன்று (ஏப்.18) காலையில் வழங்கப்பட்டது. அவர்கள் அந்த வாக்குச்சாவடிக்குச் சென்று விட்டனர். அவர்களிடம் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒப்படைப்பர்.
காலை 5.30 மணி முதல் 7 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் குளறுபடி இருந்தால், அதனை சரிசெய்யத் தேவையான பணியாளர்களும், பொருட்களும், தேவைப்பட்டால் மாற்றுவதற்கு தேவையான அளவில் கூடுதல் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கும் வாக்குப்பதிவு செய்ய முன்னுரிமை வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் 33.71 லட்சம் பேருக்கு வாக்குப்பதிவிற்கான பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. அவை இல்லை என்றாலும், உங்கள் பெயர் வாக்களார் பட்டியலில் இருந்தால் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 12 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்கு செலுத்தலாம். வாக்குச்சாவடியில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 65 விழுக்காடு வாக்குச்சாவடிகளை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து நேரலையில் கண்காணிப்பதற்கான வசதிகள் செய்யபட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் வாக்கு செலுத்துவதற்க்கு வந்து செல்ல வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. SAKSHAM செயலி மூலமும், 1950 என்ற இலவச தொலைபேசி உதவி எண் மூலமும் மாற்றுத் திறனாளிகள் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு வாக்கு செலுத்த வாகன வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.
சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் வாக்குச்சாவடிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெயில் காலம் என்பதால், கூடுதலாக பந்தல் போடும் பணிகள், குடிநீர் வசதி மற்றும் மருத்துவக்குழு ஆகியோர் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாவட்டத்தில் கடந்த தேர்தல்கள் அமைதியான முறையில் தான் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு மாலை 7 மணிக்குள் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். சென்னையில் தேர்தல் பணியில் மொத்தம் 19,419 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 11,800க்கும் மேற்பட்டோர் பெண் பணியாளர்கள். சட்டமன்றத் தாெகுதிக்கு ஒரு வாக்குச்சாவடி மையம், பெண் பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.
தொடர்ந்து கண்காணிப்பது என்பது எங்களின் கடமையாகும். தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேவையான பணிகளை நாங்கள் செய்துள்ளோம். பொதுமக்கள் தங்களின் வாக்கினைச் செலுத்த வேண்டும். சென்னையில் இருந்து வேலை காரணமாக இருப்பவர்கள் இன்றே வெளியூர்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். சென்னையின் வாக்குப்பதிவினை உயர்த்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை Vs லக்னோ; நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது! - CSK Vs LSG Ticket Booking