கோவை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளித்த நேர்காணலானது திமுக - விசிக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று கோவை விமான நிலையம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "திமுக - விசிக இரு கட்சிகளுக்குமிடையே எந்த சலசலப்பும் இல்லை. விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பும் இல்லை.
இதையும் படிங்க: தயாநிதி மாறனின் அவதூறு வழக்கு; ஈபிஎஸ் விலக்கு கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!
என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சிறிய வீடியோவில் 'ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு' என்ற கருத்தை விவாதத்துக்கு பலரும் எடுத்துக் கொண்டனர். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது. ஆனால் திமுக , விசிக இடையில் எந்த சிக்கலும் இல்லை." என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை இருக்குமா என்ற கேள்விக்கு, "உட்கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு கலந்து பேசி தான் எந்த நடவடிக்கையும் இருக்கும். கட்சி விவகாரங்களை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், உயர்நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள தோழர்களுடன் தொலைபேசி உள்ளேன். மீண்டும் அவர்களுடன் கலந்துபேசி அது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.
கருத்து சொல்வதற்கு உரிமை உண்டு: இந்நிலையில் சென்னை வந்தடைந்ததும் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: "வரும் அக்டோபர் 2-ம் தேதி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் தோழமைக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி திமுகவின் பவள விழா காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அந்த மாநாட்டில் நாங்கள் பங்கேற்கிறோம்" என்றார்.
இதைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருவது குறித்து கேட்டபோது, "ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை உண்டு. சுதந்திரம் உண்டு. எல்லா கட்சிகளிலும் தனிநபர் அவரவர் கருத்துக்களை சொன்னாலும் இறுதியில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி கட்டுப்படும். ஆதவ் அர்ஜுனா கூட, கூட்டணி தொடர்பான முடிவை தலைமை எடுக்கும். அதில் நான் தலையிட மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கொண்டுள்ள நல்லுறவு, கூட்டணி உறவு என எந்த பாதிப்புமின்றி இயங்கிக் கொண்டிருக்கிறது" என்றார்.