சென்னை: சென்னை திருவொற்றியூர் திருநகர் பகுதியில் வசித்து வருபவர் பத்மா (45). இவர் சென்னையிலுள்ள ஓமியோபதி மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பத்மாவின் கணவர் ஓமன் நாட்டில் ஓட்டுநர் வேலை செய்து வரும் நிலையில், பத்மா தனது இரு மகன்களான நிதேஷ் (20). சஞ்சய் (14) ஆகியோருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நிதேஷ் அதே பகுதியில் உள்ள தனது பெரியம்மாவின் வீட்டுக்கு சென்று தான் எடுத்து சென்ற பையில் வீட்டு சாவியையும், தனது செல்போனையும் வைத்துவிட்டு அங்கிருந்து திரும்பி வைத்துள்ளார்.
வாய்ஸ் மெசேஜ்: இந்த நிலையில், நேற்று பெரியம்மாவின் மகள் மகாலட்சுமி நிதேஷுக்கு போன் செய்தபோது வீட்டுக்குள் இருந்து போன் அடித்துள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது அதில் நிதேஷின் சில வாய்ஸ் மெசேஜுகள் இருந்துள்ளன. அதில், நிதேஷ் ''தனது அம்மாவையும், தம்பியையும் கொலை செய்துவிட்டேன், நானும் தற்கொலை செய்துகொள்ள போகிறேன்'' என பேசியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி உடனே நிதேஷின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் பத்மாவும், சிறுவன் சஞ்சய்யும் கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர்.
இதை பார்த்து அலறிய மகாலட்சுமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளார். உடனே அங்கிருந்து இரவு பணியில் இருந்த புது வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் கிருஷ்ணராஜூக்கு அலெர்ட் செய்துள்ளனர். பின்னர், அவர் நேரில் வந்து விசாரணை செய்து தொலைபேசி மூலம் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையரின் தனிப்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மாயமான நிதிஷை போலீசார் தேடி வந்தனர்.
கடற்கரையில் உறக்கம்: அப்போது, திருவெற்றியூர் குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் உள்ள பழுதடைந்த கப்பலில் நிதிஷ் போதையில் படுத்து உறங்கி இருப்பது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் கைது செய்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.
வெளிநாட்டில் தந்தை: விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.. அதாவது, பத்மாவின் கணவர் முருகன் ஓமன் நாட்டில் மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்த நிதேஷ் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். ஆனால், அவர் 15 அரியர் வைத்திருந்ததால் தாய் பத்மா அடிக்கடி நிதேஷை கடிந்துகொண்டுள்ளார். இதுகுறித்து பத்மா திட்டும் போதெல்லாம் நிதேஷ் வீட்டை விட்டு ஓடி விடுவாராம். பின்னர் நண்பர்கள் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டு சென்றுள்ளனர்.
மேலும், ஓமன் நாட்டில் வேலை பார்க்கும் முருகனுக்கு இன்னும் சில வருடங்களில் வேலை நிறைவு பெறுகிறதென்பதால் அதன் பிறகு வீட்டு வருமானம் குறைந்துவிடும். அத்துடன், பத்மாவுக்கு ஏற்கனவே 3 லட்ச ரூபாய் கடனும் உள்ளது. இந்த சூழலில் மகன் நிதேஷ் அரியர் முடிக்காமல் வேலைக்கும் செல்ல முடியாமல், மேற்படிப்புக்கும் செல்ல முடியாமல் இருப்பது பத்மாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாயை கொல்ல கத்தி: இதனால் பத்மாவுக்கும், நிதேஷுக்கும் அடிக்கடி வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த நிதேஷ் பத்மாவை தீர்த்துக்கட்டவும் திட்டம் தீட்டியுள்ளார். அதற்காக புதிதாக கத்தியையும் வாங்கி வைத்துள்ளார்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் சுமார் 1:30 மணி அளவில் பத்மா உறங்கிக் கொண்டிருந்த போது அவரது கழுத்தில் நிதேஷ் கத்தியால் குத்தியுள்ளார். வலி தாங்க முடியாமல் பத்மா கத்தவே தாயின் அலறல் சத்தம் கேட்டு அறையில் தூங்கிக் கொண்டிருந்த தம்பி சஞ்சய் எழுந்து வந்துள்ளான். தாயை ரத்த வெள்ளத்தில் கண்டு தடுக்க வந்த தம்பியையும் நிதேஷ் இரக்கமே இல்லாமல் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பத்மாவும், சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தியேட்டரில் அமர்ந்து படம்: அதன் பின்னர் தாய் பத்மாவையும், தம்பி சஞ்சயையும் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, ஒரு பேக்கில் தனக்குத் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு நிதேஷ் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அங்கிருந்து நேராக பெரியம்மாவின் வீட்டில் சிறிது நேரம் இருந்த நிதேஷ் நண்பர்களுடன் மது குடித்துவிட்டு பின்னர் திருவொற்றியூரில் உள்ள திரையரங்கிற்கு சென்று 'மகாராஜா' படத்தை பார்த்துள்ளார்.
முன்னதாக, நிதேஷ் தனது பெரியம்மாவின் வீட்டில் வைத்திருந்த பையில் இருந்த செல்போனில் '' நான் என் அம்மாவையும், தம்பியையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை, என்னுடன் அவர்களையும் சேர்த்துக்கொண்டு போக போகிறேன்' என வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்திருந்தார். இதனால், தாய், தம்பியை கொலை செய்துவிட்டு நிதேஷும் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள கடற்கரைக்கு சென்றார் என்றும் சொல்லப்படுகிறது. போலீசாரும் நிதேஷை கடற்கரையில் வைத்துதான் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டிருந்த தாய், மகன் இருவரது உடல்களை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் நிதேஷை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
படிப்பில் ஏன் அரியர் வைத்தாய் என தாய் கேட்டதால் சைக்கோவாக மாறிய மகன் தாயையும், தம்பியையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.