திருப்பத்தூர்: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கல்விக் குழுமத்தின் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (பிப்.10) நடைபெற்றது. இதில் ஏராளமான பட்டதாரிகள் பங்கேற்று, வேலை வாய்ப்பினை பெற்றனர். அதனைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு பணிநியமன ஆணையை புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி.சண்முகம் பேசியதாவது, “தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களில், சமூக விரோதிகள் சிலர் போதைப் பொருட்களை விற்று வருகின்றனர். இவற்றைத் தடுக்கும் வகையில், வேலூர் நாடாளுமன்றத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் கிரிக்கெட், கபடி, வாலிபால் போட்டி மற்றும் போதைப் பொருட்கள் விழிப்புணர்வு குறித்து மாரத்தான் நடத்த உள்ளோம்.
புதிய நீதிக்கட்சி, தேர்தல் பணியை துவங்கி 6 மாதங்கள் ஆகிறது. மக்கள் சேவைக்காக வந்துள்ளோம். நடக்கவிருப்பது கவுன்சிலர், நகர்மன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இல்லை, பிரதமர் தேர்தல். யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி திமுக மற்றும் அதிமுகவும் ஓட்டு கேட்பார்கள்? திமுக மற்றும் அதிமுகவால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாது.
பாரத ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக தலைவர் மோடி பிரதமர் வேட்பாளர். அவர் நாடாளுமன்றத்தில் 370 இடங்களில் ஆட்சி மலரும் என்று கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி கூடினால், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவார்கள். நாட்டில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் லஞ்சம் இல்லா ஆட்சி வர இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.
மக்களுக்குச் சேர வேண்டிய திட்டங்கள் முழுவதுமாக வந்து சேரவில்லை. அரசாங்கத்தின் பணம், 60 சதவிகிதம் வீணாக்கப்படுகிறது. 40 சதவிகிதம் மட்டுமே திட்டங்களாக வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது.
உலகத்தில் இந்தியா 5வது பொருளாதார நாடாக மாறியுள்ளது. விரைவில் 3வது இடத்திற்கு வருவோம். கட்டமைப்பில் ரஷ்யாவைக் காட்டிலும் இந்தியா 100 மடங்கு வளர்ந்து இருக்கிறது. உலக அளவில் இந்தியாவிற்கு தனி மதிப்பு உள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: "சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் கடந்த 5 ஆண்டுகளில் நாடு கண்டது" - மக்களவையில் பிரதமர் மோடி!