சென்னை: பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், விண்ணப்ப பதிவு தொடங்கிய 13 நாட்களில், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சென்ற வருடம் (2023-24) கலந்தாய்வில் 474 கல்லூரிகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 196 இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது. அதில், 1 லட்சத்து 69 ஆயிரத்து 887 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2022-23ஆம் கல்வியாண்டை விட 12.05 சதவீதம் அதிகமாகும். அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களுக்கான மொத்த இடங்கள் 12 ஆயிரத்து 136 ஆகும். அதில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், 2024-2025ஆம் கல்வியாண்டில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (SAP), மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் 16, மத்திய அரசின் கல்லூரிகள் 5, தமிழ்நாடு அரசின் கல்லூரிகள் 11, அரசு உதவி பெறும் 3 பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 393 என மொத்தம் 429 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்ப்யூட்டர் சார்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI ), சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட கம்ப்யூட்டர் சார்ந்த பாடப் பிரிவுகளில், ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் 25 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு விண்ணப்ப பதிவு தொடங்கிய 13 நாட்களில், 1 லட்சத்து 23 ஆயிரத்து 900 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 67ஆயிரத்து 48 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தி இருந்தனர். 32 ஆயிரத்து 360 மாணவர்கள் கடந்த ஆண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். 2024-25ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கு மே 6 முதல் 18ஆம் தேதி வரையில் 13 நாட்களில் 1லட்சத்து 69 ஆயிரத்து 955 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
1 லட்சத்து 17 ஆயிரத்து 596 மாணவர்கள் கட்டணங்களைச் செலுத்தி இருக்கின்றனர். 78 ஆயிரத்து 467 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்தாண்டு எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 610 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! - TRB Additional Teachers Vacancies