சேலம்: பயணிகள் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதையும், முறைகேடாக பயணம் செய்வதையும் தடுக்க, தொடர் சோதனைகளை நடத்திட சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில், ரயில்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வரும் அதிகாரிகள், ரயில்களில் விதிமுறைகளை மீறும் பயணிகளிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த மாதம் சேலம் ரயில்வே கோட்ட பகுதியில், ரயில்களில் சுமார் 5 ஆயிரத்து 500 அதிரடி சோதனைகளை டிக்கெட் பரிசோதனைக் குழுவினர் நடத்தினர். இந்த சோதனையின் மூலம், ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 14 ஆயிரத்து 213 பேர் பிடிபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 21 லட்சத்து 11 ஆயிரத்து 61 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இதேபோல், முன்பதிவில் டிக்கெட் எடுத்து முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்த 11 ஆயிரத்து 327 பேர் பிடிபட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 60 லட்சத்து 91 ஆயிரத்து 440 ரூபாய் அபரதம் வசூலிக்கப்பட்டது. மேலும், ரயில்களில் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான லக்கேஜ் எடுத்துச் சென்றவர்கள் 42 பேரிடம் 22 ஆயிரத்து 448 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது, முறைகேடாக பயணம் செய்தது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி அதிகமான லக்கேஜ் எடுத்துச் சென்றது என 25 ஆயிரத்து 582 பேரிடம் இருந்து ஒரு கோடியே 82 லட்சத்து 24 ஆயிரத்து 949 ரூபாய் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரயில்களில் முன்பதிவு இல்லாமலும், அதிக அளவில் லக்கேஜ் எடுத்துச் செல்வது தண்டனைக்கு உரியது என்றும், தொடர்ந்து இனிவரும் காலங்களில் ரயில்களில் அதிக அளவில் சோதனை நடத்திட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீட்டில் தந்தை சடலம்.. தந்தையின் கனவை நனவாக்க கண்ணீருடன் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி!