ஈரோடு: ஈரோட்டில் ஆற்றல் அறக்கட்டளை என்ற பெயரில் சமூக சேவை செய்து வரும் அசோக் குமார், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். தற்போது ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்பாளராக அசோக் குமார் அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து ஆற்றல் அசோக்குமார் வேட்புமனு தாக்கல் செய்த போது, தேர்தல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் அளித்துள்ள சொத்துப் பட்டியலில் தனது மற்றும் மனைவி பெயரில் அசையும், அசையா சொத்துக்கள் என 653 கோடி ரூபாய் கணக்கு காண்பித்துள்ளார்.
இந்த சம்பவம் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மத்தியில் பேசு பொருளான நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கராவிடம் கூடுதலாக இரண்டாவது முறையாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வேட்பாளர் அசோக் குமார், "நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமம் தான். அப்போது பொருளாதாரத்தில் நடுநிலை குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தேன். படிப்பு, கடுமையான உழைப்பு, சமுதாய ஒத்துழைப்பு காரணமாகத்தான் பொருளாதாரத்தில் இந்த நிலைக்கு வந்துள்ளேன்.
இதற்கு சமுதாயத்திற்கு திருப்பி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் சமூக சேவை ஆற்றி வருகின்றேன். நான் தொகுதிக்காக செய்யவில்லை, ஊருக்காக செய்து வருகிறேன். அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள், மக்களை பார்த்துக் கொண்டால் விரைவில் நாடு வளர்ச்சி அடைந்துவிடும். எனது சொத்துப் பட்டியல் குறித்து பட்டியலிட்டு காண்பித்து உள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாக உழைப்பு, உழைப்பு என்ற அடிப்படையில் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனது தாயார், தந்தை கல்லூரி பேராசிரியர்களாக இருந்தனர். படிப்புக்கு முன்னுரிமை அடிப்படையில் எனது தாய், தந்தை என்னை இந்த முன்னேற்றத்திற்கு கொண்டு வந்துள்ளனர்” என்றார்.
மேலும், சித்தோடு காவல்நிலையத்தில் வாக்காளர்களுக்கு புத்தாடை வழங்கியதாக வழக்குப் பதிவு செய்து இருப்பதற்கு விளக்கமளித்த ஆற்றல் அசோக் குமார், “ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு கொண்டாடும் வகையில், ஆற்றல் அறக்கட்டளை சார்பில் இரண்டு வருட காலமாக முன்களப் பணியாளர்களை கெளரவப்படுத்தும் வகையில் சேலை, வேட்டி போன்ற புத்தாடை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு கொண்டாட புத்தாடை வாங்கப்பட்டது.
தேர்தல் காரணமாக புத்தாடை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதமான தேர்தல் உள்நோக்கமும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு தோல்வி பயத்தின் காரணமாக என் மீது தேவையில்லா விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றனர். இதற்கு தக்க பதிலை மக்கள் ஒரு விரலில் ஓங்கி அடிப்பார்கள்.
திராவிட மாடல் அரசியலுக்கு திமுக விளக்கம் கொடுத்தால், கார்ப்பரேட் அரசியலுக்கு விளக்கம் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். அதிமுகவில் தனக்கு சீட் வழங்கப்பட்டதில் எந்த வித உட்கட்சி பூசலும் கிடையாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற அடிப்படையில் அரசியல் பயணத்தில் ஈடுபடுவேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுகவை புறக்கணிக்க மக்கள் தயாராக உள்ளனர்”.. எல்.முருகன் பேச்சு! - L Murugan Campaign