திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் திட்டங்களே இல்லாத ஜீரோ பட்ஜெட், ஆனால் இன்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மக்களுக்கான திட்டங்களை வாரி வழங்கியுள்ளார். தமிழக அரசின் பட்ஜெட் சிறப்பான பட்ஜெட், கோவை பகுதிக்கு அதிக அளவில் திட்டங்களைத் தந்துள்ளனர்.
சி.ஏ.டி அறிக்கையில் மத்திய பாஜக அரசு 7½ லட்சம் கோடி ஊழல் செய்திருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் ஊடகங்கள் இதனைப் பெரிய அளவில் வெளிப்படுத்தவில்லை. தேர்தல் பத்திரம் பெற்றதில் பாஜக மிகப் பெரிய ஊழல் செய்துள்ளது. மற்ற கட்சிகளைவிட 5 மடங்கு நிதியை பாஜக பெற்றுள்ளது.
மக்களுக்கு எதுவும் தெரியாது என பாஜக அரசு நினைத்துக் கொண்டு, ராமர் கோயிலை வைத்து மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்புப் பணம் ஒழித்து, அனைவருக்கும் 15 லட்சம் கொடுப்போம் என்றும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என பாஜக அரசு கூறியது இதுவரை எதுவும் நிறைவேறவில்லை.
தமிழகத்தில் பெரும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இன்னும் நிதி வழங்கவில்லை. மத்திய அரசு 5 எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்தது 4 இடங்களில் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால் மதுரை எய்ம்ஸ் செங்கல்லோடு நிற்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்தவித ரயில்வே திட்டங்களும் இல்லை, திருக்குறளைச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள். உள் ஒதுக்கீட்டை எதிர்த்தது அதிமுக, ஆனால் கலைஞர் உள் ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பான திட்டங்களைத் தந்தவர்.
கலைஞரால் வடிவமைக்கப்பட்டதுதான் தமிழகம். தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. 372 முதல் 400 இடங்களை பாஜக பிடிக்கும் என்கிறார்கள், இதைப்பார்க்கும் போது வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் ஏற்படுகிறது.
வளர்ந்த நாடுகளே வாக்குச் சீட்டு பயன்படுத்தும் போது இங்கு மட்டும் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. வாக்குச் சீட்டு முறைதான் சரியானதாக இருக்கும். தமிழகத்தின் வளர்ச்சி மத்திய பாஜக அரசுக்குப் பிடிக்கவில்லை எனவே அனைத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2024: மகளிருக்கான முக்கிய அறிவிப்புகள் என்ன?