மயிலாடுதுறை: ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு உலக புகழ் பெற்ற திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற ஶ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தர் மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இந்த சிறப்பு பெற்ற கோயிலில் ஆண்டுந்தோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 29 ஆம் தேதி அபிராமி அம்மன் சன்னதியில் ரிஷப கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் சுப்பிரமணிய சுவாமி கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்திக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துனர்.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அபிராமி அம்மன், வெள்ளி அலங்காரத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. மேல வீதியில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி ஆகிய நான்கு வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில், வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாரதனை, அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "கோவைக்கு எது அவசியம், எது அவசரம் என்று கேட்டறிந்து செயல்படுவேன்" - புதிய மேயர் ரங்கநாயகி உறுதி! - coimbatore new mayor