சென்னை: ஆடி திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அயப்பாக்கம் எல்லை பிடாரி ஊர் காவல் தெய்வம் ஸ்ரீ தேவி செல்லியம்மன் திருக்கோயிலில் ஆடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி தலைவர் துரை வீரமணி ஏற்பாட்டில், 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 3 ஆம் நாளான இன்று ஸ்ரீ தேவி செல்லியம்மன் திருக்கோயிலில் கரக ஊர்வலம் மற்றும் கூழ் வார்த்தல் நடைபெற்றது. இதில், மக்கள் நேர்த்திகடனை செலுத்த கோழி, ஆடு உள்ளிட்டவற்றை பலி கொடுத்தனர்.
இதில், 1000 கிலோ கோழி, 500 கிலோ ஆடு, 500 கிலோ மீன், 5 ஆயிரம் முட்டையுடன் படையல் தயார் செய்யப்பட்டு, பம்பை உடுக்கை முழங்க பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு தலை வாழை இலையில் தடபுடலாக விருந்து வழங்கப்பட்டது.
முன்னதாக அம்மனுக்கு கிராம மக்கள் பட்டு புடவை, வளையல், பழ வகைகள், தானியங்கள் என சீர்வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு படைத்தனர். ஆவடி துணை ஆணையர் அய்மன் ஜமால் ரதத்தை இழுத்து தொடங்கி வைக்க, தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கையுடன் செல்லியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்.. விண்ணைப் பிளந்த உடுக்கை முழக்கம்! - Aadi Krithigai