தூத்துக்குடி: தூத்துக்குடி சங்கு காலனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த களஞ்சியம் - கணேஷ்வரி தம்பதிக்கு, 5 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருந்தனர். அவர்களுள் இரண்டு மகன்களுக்கு திருமணமான நிலையில், மற்ற மூன்று பேர் கடல் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், கணேஷ்வரி தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடல் தொழில் செய்து வரும் இவரது கடைசி மகனான மாரிசெல்வம் என்ற அசால்ட் (24) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, காளிதாஸ் மற்றும் அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த சேது மகன் ஆகாஷ் உள்ளிட்டோருக்கும் கடந்த ஜூன் 21ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பிரபு மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் மாரிசெல்வம் வீட்டிற்குச் சென்று ஆள் வைத்து தூக்கி விடுவோம் என்று கூறி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், ஜூன் 22ஆம் தேதி முதல் மாரிசெல்வம் காணவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து மாரிசெல்வத்தை அடித்து ஓட, ஓட விரட்டியதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், மாரிசெல்வம் குடும்பத்தினர் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், காணாமல் போன மாரிசெல்வம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, கடந்த திங்கள் அன்று மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாரிசெல்வத்தின் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து போலீசார் மேட்டுப்பட்டி பகுதியில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, காணாமல் போனதாக கூறப்பட்ட மாரிசெல்வம் கஞ்சா போதையில் பிரபு, காளிதாஸ், ஆகாஷ் ஆகியோரிடம் தகராறு செய்ததாகவும், அந்த கோபத்தில் திரேஸ்புரம் உப்பு சங்கு அலுவலகம் பின்புறம் மூன்று சிறார்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கி ஓட ஓட விரட்டி செங்கல்லால் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.
அதனால் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை, அந்த கும்பல் கை, கால்களை கயிற்றால் கட்டி, குழி தோண்டி புதைத்தது தெரியவந்துள்ளது. பின்னர், புதைக்கப்பட்ட இடத்தை சிறுவன் அடையாளம் காட்டியதை அடுத்து, விஏஓ முன்னிலையில் மாரிசெல்வத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
எடுக்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர், மாரிசெல்வத்தின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி அருகே பிரபல ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீசார்.. நடந்தது என்ன?