சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம், விற்பனை உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசுடன் இணைந்து காவல்துறை எடுத்து வருகிறது. இருந்தாலும், அண்டை நாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்துவது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது போன்ற குற்றச் செயல்கள் அவ்வப்போது நடப்பதும், அதில் போலீசார் நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் அன்புக்கரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை!
அப்போது சுமார் 7.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்த யாசர் அராபத் (31) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், சினிமாவில் லைட் மேனாக பணி புரிந்து வரும் இவர், அதில் வாங்கும் சம்பளம் போதவில்லை என்பதால் கஞ்சா விற்பனையில் இறங்கியதாகவும், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களைக் குறி வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. தற்போது இதுதொடர்பாக யாசர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்