சேலம்: சேலம் அடுத்த பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் பிரியா (29). இவருக்கு விஜய கணேஷ் என்பவருடன் திருமணமாகி, இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரியாவின் கணவர் விஜய கணேஷ் உயிரிழந்தார். இதனிடையே, சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பிரியா வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், வீராணம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (23) என்பவர், பிரியா பணிபுரியும் பிரியாணி கடைக்கு அடிக்கடி சென்றுள்ளார். இதில் இருவருக்கிடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும், இதனால் பிரியா கோகுலிடம் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு (சனிக்கிழமை) சேலம் நான்கு ரோடு பேருந்து நிறுத்தம் அருகே வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்துக்காக பிரியா காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கோகுல் பிரியாவை பார்த்ததும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, பிரியாவை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பிரியாவுக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கோகுலை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், இச்சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த பிரியாவை மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய கோகுலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று, அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தான் காதலித்து வந்த பிரியாவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவரை தாக்கியதாக தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: எழும்பூர் ரயில் நிலைய வாசலில் கத்திமுனையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. இருவர் கைது!