திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த காக்களூரில் அரசு ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (ஆக.20) வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பால் உற்பத்தியாகி வெளியே வரும்போது அதனை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்தி என்பவரது மனைவி உமா ராணி(30) என்பவரின் தலைமுடி எதிர்பாராத விதமாக இயந்திரம் அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியுள்ளது.
இதனால், உமா ராணியின் தலை மோட்டாரில் சிக்கி ஏற்பட்ட விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே அவர் தலை துண்டாகி பலியாகியுள்ளார். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார், உமா ராணி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், இவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும், இறந்த பெண் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த 6 மாதமாக வேலைக்கு வந்ததும் தெரியவந்தது. தற்போது இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியின் போது, பெண் தலைமுடி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்து; ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு! - signing conciliation agreement