தென்காசி: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை (அக்.21) மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராயம்மாள், மாவட்ட ஆட்சியரிடம் மதுக்கடையை அடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர், தனது கோரிக்கையை நிறைவேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசும் போது, "தென்காசி நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் 26 வருடங்களுக்கு முன்பு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டில் தான் வசித்து வருகின்றேன். 26 வருடங்களாகியும் இதுவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தினால், அந்த வீட்டில் வாழ முடியாமல் மாட்டுத் தொழுவத்தில் வாழ்ந்து வருகின்றோம்.
இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்காததால், குடும்பத்துடன் கஷ்டப்பட்டு வருகின்றோம். இந்நிலையில், தனது மகன்களையும் கஷ்டப்பட்டு பொறியியல் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்துள்ளேன். ஆனால், அவர்கள் தனது வீட்டில் அருகாமையில் உள்ள மதுக்கடையால் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். ஆகையால், அங்கிருந்து மதுக்கடையை அப்புறப்படுத்தவும்" கண்ணீர் மல்கக் கதறி அழுதபடி கோரிக்கை வைத்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்