திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் அதேபகுதியைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமையலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இன்று (ஏப்.08) காலை வழக்கம் போல அந்த பெண் உணவு சமையல் செய்வதற்காகப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த பெண் சென்ற பாதையின் வழியாக வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் மகுடிஸ்வரன் என்பவர் சமையல் செய்யும் இடத்தில் கணக்கு பார்க்க வேண்டும் என கூறி அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, சமையல் கூடத்தில் இருந்த பொருட்களை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும்போது அந்த பெண்ணிடம், மகுடிஸ்வரன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த அந்த பெண் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் மகுடிஸ்வரன் மீது மானபங்கம் செய்தல், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், தலைமறைவான மகுடிஸ்வரனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்ற நிலையில், தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றும் சமையலர் பெண்ணிடம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்து மகுடிஸ்வரனை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுமட்டும் அல்லாது, கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து மகுடிஸ்வரனை நீக்குமாறும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோரிக்கை விடுத்து, திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: "கச்சத்தீவு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை?"